செய்திகள்

8 நாட்களாக நடைபெற்ற லாரி ஸ்டிரைக் வாபஸ் - நள்ளிரவு முதல் லாரிகள் ஓடும்

Published On 2018-07-27 15:13 GMT   |   Update On 2018-07-27 15:13 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. #LorryStrike #TruckersStrike
சென்னை:

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இன்றுடன் 8-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டது.

தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்தன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனை அடுத்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நள்ளிரவு முதல் லாரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News