செய்திகள்

குடிக்கவும், குளிக்கவும் தகுதியற்றுப்போன கங்கை நீர் - பசுமை தீர்ப்பாயம் வேதனை

Published On 2018-07-27 11:49 GMT   |   Update On 2018-07-27 11:49 GMT
கங்கை ஆற்றில் குவிந்துள்ள மாசுக்கள் பற்றி விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம் குளிக்கவும், குடிக்கவும் கங்கை நீர் தகுதியற்றுப்போனதாக எச்சரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. #NGT #saveganga #riverGanga
புதுடெல்லி:

நாட்டின் வற்றாத ஜீவநதியாகவும், புனித நதியாகவும் கருதப்படும் கங்கை ஆற்றின் புனிதம் குலைந்து, குப்பை கூளங்களும் மாசுக்களும் நிறைந்திருக்கும் நிலையை போக்குவது தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பசுமை பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த அவலநிலையை மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஹரித்வாரில் இருந்து உன்னாவ் வரையிலான இடைவெளியில் ஓடும் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ தகுதியற்ற நிலையில் இருப்பதை அறிந்த பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்துள்ளது.

தங்களது உடல்நிலையில் பின்னாளில் ஏற்படக்கூடிய பல்வேறு பக்கவிளைவுகளை பற்றி அறியாமல் இவ்வளவு அசுத்தமான நீரை பக்தியுடன் அள்ளிப்பருகும் பக்தர்கள் மற்றும் இதில் குளிப்பவர்களின் நிலையைப்பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.


சிகரெட் புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கையைப்போல், மாசாகிப்போன கங்கை நீருக்கும் இப்படியொரு எச்சரிக்கையை ஏன் வெளியிட கூடாது? எனவும் பசுமை தீர்ப்பாயம் வினவியுள்ளது.

இப்பகுதி வழியாக பாயும் கங்கை நீர் குடிக்கவும், குளிக்கவும் உகந்தது தானா? தூய்மை கங்கை திட்டத்தை நிறைவேற்றும் தேசிய அமைப்பினர் இதுதொடர்பாக ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓரிடத்தில் அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும்.

மேலும், எந்த பகுதியில் உள்ள கங்கை நீர் குளிக்கவும், குடிக்கவும் தகுதியானது? என்பதை தூய்மை கங்கை தேசிய அமைப்பும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இன்னும் இரு வாரங்களுக்குள் தங்களது இணையதளங்களில் குறிப்பிட வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #saveganga #riverGanga #Gangawaterunfitfordrinking 
Tags:    

Similar News