செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ் யாரால் பரவியது?- சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2018-07-16 05:05 GMT   |   Update On 2018-07-16 05:05 GMT
கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #NipahVirus
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதற்கு பழந்திண்ணி வவ்வால்கள் காரணம் என்று கூறப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பிறகு மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கேரளாவில் ‘நிபா’ வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோழிக்கோடு மாவட்டம் பெரும்பரா பகுதியை சேர்ந்த முகம்மதுசபீத் (வயது 26) என்பவர் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வளைகுடா நாட்டில் பணியாற்றி வந்த முகம்மது சபீத் கேரளாவுக்கு திரும்பிய போது கடந்த மே மாதம் 2-ந்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி உள்பட 4 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியது.

கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முகம்மது சபீத்தை ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றபோது அங்கும் 4 பேருக்கு பரவியது. இதற்கிடையில் 5-ந்தேதி முகம்மது சபீத் பலியானார். அதைதொடர்ந்து அவரது தந்தை, சகோதரன், மாமியார் ஆகியோரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் காரணமாக பலியானார்கள். இதுபோல 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவல்கள் மாநில சுகாதாரத்துறை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #NipahVirus
Tags:    

Similar News