செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை - அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Published On 2018-07-10 11:01 GMT   |   Update On 2018-07-10 11:01 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #AkhileshYadav
லக்னோ :

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பணம் பறிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அவர், ஜான்சி சிறைச்சாலையில் இருந்து பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் விமர்சித்துள்ளதாவது :-

தற்போது உ.பி.யில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சிறையில் அடைத்தாலும், தங்கள் எதிரியை கொன்றுவிட முடியும் என குற்றவாளிகள் நம்பிக்கையாக உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒருவித பீதி நிலவுகிறது. இதைபோன்ற ஒரு மோசமான ஆட்சியையும், குழப்பத்தையும் இம்மாநிலம் இதுவரை கண்டதில்லை.

இவ்வாறு உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #AkhileshYadav
Tags:    

Similar News