செய்திகள்

ஸ்ரீநகர் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- வேலைக்கு வராத 24 ஊழியர்கள் சஸ்பெண்ட்

Published On 2018-06-22 16:20 GMT   |   Update On 2018-06-22 16:20 GMT
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பணிக்கு வராத 24 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். #SrinagarEmployees #JKEmployeesSuspended
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்ப பெற்றதையடுத்து, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிர்வாகம் அனைத்தும் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ், அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பிற்கு வந்துள்ளது. ஊழியர்களின் செயல்பாடுகளை உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

அவ்வகையில் இன்று ஸ்ரீநகர் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக நகர் முழுவதும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், முறைப்படி விடுப்பு எடுக்காமலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும் பணிக்கு வராத 24 ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்கள் அனைவரின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து மாவட்ட ரெட் கிராஸ் கமிட்டியின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கவும் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களுக்கு குறித்த நேரத்திற்கு  வரவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். #SrinagarEmployees #JKEmployeesSuspended
Tags:    

Similar News