செய்திகள்

ஜார்க்கண்டில் முன்னாள் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில்- சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு

Published On 2018-06-22 12:30 IST   |   Update On 2018-06-22 12:30:00 IST
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் மந்திரி துலால் புயானுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் மந்திரி துலால் புயான். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தலைமையிலான அரசிலும் மதுகோடா தலைமையிலான அரசிலும் மந்திரியாக இருந்தவர். இவர் ஜூக்சலாய் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு, துலால் புயான் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் துலால் புயான் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.03 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து துலால் புயானுக்கு எதிராக 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது 21 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த துலால் புயானுக்கு நீதிபதி அனில் குமார் மிஸ்ரா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

துலால் புயான் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா கட்சியில் இணைந்தார். அதன் பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News