செய்திகள்

பாலக்காடு கொல்லங்கோட்டில் ரெயில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2018-06-20 10:22 GMT   |   Update On 2018-06-20 10:22 GMT
கேரள மாநிலம் பாலக்காடு கொல்லங்கோடு ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு தத்தமங்கலம் குற்றிக்காடு பகுதியை சேர்ந்த தேவி மகன் ஜூபின் (வயது 18). என்ஜினீயரிங் மாணவர். இதே பகுதியை சேர்ந்த மணிகண்டனின் மகன் சுமேஷ் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இவர்கள் கொல்லங்கோடு ரெயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஜூபின் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய சுமேசை பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாஸ், டி.எஸ்.பி. செய்தாலி ஆகியோர் வந்தனர். ஜூபினின் உடலை பரிசோதனை செய்தபோது சிம்கார்டு இல்லாத ஒரு செல்போன், ரூ.3100 பணம், மற்றும் மோட்டார் சைக்கிள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜூபின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்ககாக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வாலிபர்கள் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியே வந்த ரெயில் மோதி இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவதாக கூறினர்.

பலியான ஜூபின் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News