செய்திகள்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு - நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன்

Published On 2018-06-18 10:38 GMT   |   Update On 2018-06-18 10:38 GMT
நாட்டையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் கொல்கத்தா அலுவலகத்தில் ஜூன் 20-ம் தேதி ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் நிறுவப்பட்ட சாரதா நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஈடுபட்டிருந்ததால் அம்மாநிலத்தின் ஆட்சியே ஆட்டம் கண்டது.

இந்த வழக்கு தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்சா சென் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய மந்திரியின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தின் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தது. சாரதா சிட் பண்டு நிறுவனத்திடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோரஞ்சனா சிங் என்பவருக்கு அளிக்கப்பட்ட பண விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.



முன்னதாக, ஏப்ரல் 7-ம் தேதி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார்.

இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
Tags:    

Similar News