செய்திகள்
ரூ.2 லட்சம் பணப்பையை பறித்துச்சென்ற குரங்கு
உத்தர பிரதேசத்தில் வங்கி நுழைவு வாயிலில் நடந்து சென்றவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணப்பையை குரங்கு பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘நை மண்டி’ பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால்.
பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது.
அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர்.
சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து ஓடியது.
அனைவரும் குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு ஓடி மறைந்தது. 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.
ஆனால் போலீசாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.