செய்திகள்

பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார் - சித்தராமையா தாக்கு

Published On 2018-05-16 09:52 GMT   |   Update On 2018-05-16 09:52 GMT
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்காக பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் வர தாமதம் ஆனது. இது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களுடன் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், யாருக்கும் அதிருப்தி இல்லை என்றார்.



காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்திருப்பதாக மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமியும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #KarnatakaHorseTrading #Siddaramaiah
Tags:    

Similar News