செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல்

Published On 2018-05-01 20:22 GMT   |   Update On 2018-05-01 20:22 GMT
ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #GST #ArunJaitley
புதுடெல்லி:

மறைமுக வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மாதந்தோறும் அதன் வசூல் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி வசூல் ஆகியுள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும்.



கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.89 ஆயிரத்து 264 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 2017-2018-ம் நிதி ஆண்டில், ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. பொருளாதார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருப்பதை இது காட்டுகிறது.இந்த முன்னேறிய பொருளாதார சூழ்நிலையுடன் இ-வே ரசீது அமல் காரணமாகவும் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து திருப்திகரமாக அமையும் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல் தொகையில், மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.18 ஆயிரத்து 652 கோடி. மாநில ஜி.எஸ்.டி. வசூல் ரூ.25 ஆயிரத்து 704 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.50 ஆயிரத்து 348 கோடி (இறக்குமதி மீது வசூலான ரூ.21 ஆயிரத்து 246 கோடி உள்பட). உபரி வரி வசூல் ரூ.8 ஆயிரத்து 554 கோடி ஆகும்.

பொருளாதாரம் மேம்பாடு அடைந்து வருவதையும், எல்லோரும் ஜி.எஸ்.டி.யை ஏற்றுக்கொண்டதையும் இது காட்டுகிறது. இருப்பினும், நிதி ஆண்டின் கடைசி மாதத்தில் நிலுவைத்தொகையையும் பலர் செலுத்துவது வழக்கம். எனவே, இதை வருங்கால வசூலுக்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.

மார்ச் மாதத்துக்கான ஜி.எஸ்.டி.ஆர். 3பி படிவங்களை ஏப்ரல் 30-ந்தேதிவரை, 69.5 சதவீதம்பேர் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GST #ArunJaitley #tamilnews 
Tags:    

Similar News