செய்திகள்

டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் - உ.பி. அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன்

Published On 2017-12-27 21:05 IST   |   Update On 2017-12-27 21:05:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னோ மாவட்டத்தின் நவாப்கஞ்சி பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் மின்சார வசதி இல்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 32 நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சையானது டார்ச் வெளிச்சத்தின் கீழ் செய்யப்பட்டது.

மேலும் படுக்கை வசதி இல்லாததால் கடும் குளிரிலும் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியின் மருத்துவ அதிகாரியை நீக்கி அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த் நாத் சிங் ஆணையிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.



மிகவும் கவனமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, அந்த சம்பவம் குறித்து பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Similar News