செய்திகள்
கேரள போலீஸ் நிலையத்தில் கைதிகள் ஆடிய ஜிமிக்கி கம்மல் நடனத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசித்த காட்சி.

சினிமா பாணியில் போலீஸ் நிலையத்தில் வாலிபர்களை மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த இன்ஸ்பெக்டர்

Published On 2017-11-02 12:09 IST   |   Update On 2017-11-02 12:09:00 IST
சினிமா பாணியில் போலீஸ் நிலையத்தில் வாலிபர்களை விடிய விடிய மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல், ஒரு கண்ணாடி (ஓ.கே, ஓ.கே) என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும், உரிய ஆவணங்கள் இல்லாமல் போக்குவரத்து போலீசில் சிக்கி கொள்வார்கள்.

போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற பின்னர் சந்தானத்தை விடியவிடிய மிமிக்ரி செய்ய சொல்லி போலீசார்கள் ரசித்து மகிழ்வார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அதன் விபரம் வருமாறு:-

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தரூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளவர் அலவி. இவர் நேற்று முன்தினம் 3 குற்றவாளிகளை பிடித்து போலீஸ் நிலையத்தில் அடைத்தார்.

நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் 3 வாலிபர்களையும் அரை நிர்வாணமாக்கினார். பின்னர் தனது மேஜை முன்பு வரவழைத்து அவர்களிடம் சினிமா பாட்டு மற்றும் மிமிக்ரி செய்து காட்டும்படி கூறினார்.

இதில் சந்தோ‌ஷம் அடைந்த வாலிபர்கள் தனக்கு தெரிந்த ‘‘ஜிமிக்கி கம்மல்’’ உள்ளிட்ட சினிமா பாட்டுகளை பாடினர். மிமிக்ரியும் செய்து காட்டினர். இதனை இன்ஸ்பெக்டர் அலவி மற்றும் போலீசார் கண்டு ரசித்தனர். விடியவிடிய இந்த சம்பவம் அரங்கேறியது.

இதனை அங்கிருந்த போலீசார் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக மாநிலம் முழுவதும் பரவியது.


இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் நிலையத்திற்கு வாலிபர்களை அரை நிர்வாணப்படுத்தி பாட்டு, பலகுரலில் பேச வைத்த சம்பவம் மனித உரிமை மீறும் செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உரிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, தரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலவி மற்றும் கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் சம்பவம் உறுதியானால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Similar News