செய்திகள்

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் தனியார்மயம் - மத்திய அரசு திட்டம்

Published On 2017-09-28 05:48 IST   |   Update On 2017-09-28 05:48:00 IST
பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகள் உள்ளன. அவற்றில் சில கிணறுகள், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், கடந்த 1992-1993-ம் நிதிஆண்டில் தனியாருக்கு விற்கப்பட்டன.

25 ஆண்டுகள் கழிந்த நிலையில், உற்பத்தி நிலையில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளின் பெரும்பாலான பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விரைவில் இதுதொடர்பாக மத்திய மந்திரிசபையை அணுக திட்டமிட்டுள்ளது.

நாட்டிலேயே பெரிய எண்ணெய் கிணறான மும்பை எண்ணெய் கிணறு உள்ளிட்டவை பங்கு விற்பனை பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இந்த கிணறுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மந்தகதியில் நடக்கிறது. சேவை நிறுவனங்களை ஈடுபடுத்தியும் பலன் கிடைக்கவில்லை.

எனவே, தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் நவீன தொழில்நுட்பத்தையும், முதலீட்டையும் புகுத்தி, உற்பத்தியை அதிகரிப்பார்கள் என்று பெட்ரோலிய அமைச்சகம் கருதுகிறது.

தற்போது, எண்ணெய் தேவையில் 80 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளையே இந்தியா சார்ந்து இருக்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் இதை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை கருத்தில் கொண்டும் பெட்ரோலிய அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Similar News