செய்திகள்

மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு 10 பேர் பலி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2017-08-30 21:15 IST   |   Update On 2017-08-30 21:16:00 IST
மராட்டிய மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழைக்கு 10 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் மட்டும் பலத்த மழைக்கு 10 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக பேரிடர் மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், பால்கர் மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர். தானே மாவட்டத்தில் ஒருவரது உடலை மீட்டுள்ளோம். விரார் மற்றும் வசாய் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தலா ஒருவர் பலியாகினர்.

மேலும், தஹிசர், மலாட், தாதர் பகுதிகளிலும் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். காட்கோபரில் பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலியானார் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சாண்டாகுரூஸ் வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று வரை சுமார் 334 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் ஜூலை மாதம் மிக அதிக அளவாக 944 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Similar News