செய்திகள்

போதுமான ஆதரவு இல்லை என்பதால் வாபஸ் பெற வேண்டுமா? மீரா குமார் ஆதங்கம்

Published On 2017-07-01 17:47 IST   |   Update On 2017-07-01 17:47:00 IST
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதால் வாபஸ் பெறவேண்டுமா என்ன? என எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.
பெங்களூர்:

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அவ்வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக மீரா குமார் இன்று பெங்களூர் வந்தார். பின்னர் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆதரவு கட்சிகளின் வாக்கு விவரங்களை கணிக்கும்போது, பா.ஜ.க. ஆதரவு வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் நீங்கள் ஏன் போட்டியிடுகிறீர்கள்? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் சற்று அதிருப்தி அடைந்த மீரா குமார், பின்னர் நிதானமாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘இதே கேள்வியை ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன். வெற்றியாளர் ஏற்கனவே முடிவாகிவிட்டால் தேர்தலை ஏன் நடத்தவேண்டும்? சபர்மதி ஆசிரமத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்கியிருக்கிறேன். காந்திஜியின் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறேன். எனக்கு போதிய ஆதரவு இல்லை என நினைப்பதால் வாபஸ் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நான் போட்டியிடுவதை நீங்கள் விரும்பவில்லையா?’ என எதிர்கேள்வி எழுப்பினார்.

‘இந்த தேர்தல் இரு தலித் வேட்பாளர்களுக்கு இடையே நடப்பதாக பேசப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடும் சமயத்தில் படித்தவர்கள் கூட சாதி பற்றி பேசுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முன்பு, ஜனாதிபதி வேட்பாளர்களின் கல்வி மற்றும் அனுபவங்களைப் பற்றி பேசினர். ஆனால் இப்போது நானும் கோவிந்தும் போட்டியிடும்போது, கவனம் சாதி மீது உள்ளது’ என்றும் மீரா குமார் வேதனை தெரிவித்தார்.

Similar News