செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக செயல்படும் வருமானவரி அதிகாரிகள்: சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு

Published On 2017-03-15 05:42 GMT   |   Update On 2017-03-15 05:42 GMT
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக வருமான வரித்துறையினர் செயல்படுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வருமானத்தை மீறி பல வகைகளில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இது சம்மந்தமாக சென்னையில் உள்ள வருமான வரி அதிகாரிகளுக்கு போதிய ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளன.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் பல முதலீடுகளை செய்துள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பல்வேறு கணக்குகளை தொடங்கி உள்ளார். இதுசம்மந்தமான அனைத்து தகவல்களும் கிடைத்தும் வருமான வரித்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.


அவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்கள். அவர்கள் தான் இப்போதும் அதிகாரிகளாக இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்மந்தமாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News