செய்திகள்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி பறிமுதல்

Published On 2017-01-30 00:15 GMT   |   Update On 2017-01-30 00:15 GMT
சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி பணம் சிக்கியது. இதேபோல் ரூ.25 கோடி மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி பணம் சிக்கியது. இதேபோல் ரூ.25 கோடி மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வாக்காளர்களை கவருவதற்காக பணம், மதுபானம் மற்றும் போதைப் பொருள் வழங்குவதை தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் விதமாக மத்திய பார்வையாளர்கள் தவிர, தேர்தல் செலவை கண்காணிக்கும் அதிகாரிகள் 200 பேரையும் தேர்தல் கமிஷன் நியமித்து உள்ளது. மேலும், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டின் கீழ் போலீசாரும், கலால் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே இந்த மாநிலங்களில் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பணம், மதுபானம், போதை பொருட்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 4 வாரங்களில் மட்டும் ரூ.96 கோடியை போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உத்தரபிரதேசத்தில் ரூ.87 கோடியே 67 லட்சம், பஞ்சாபில் ரூ.6 கோடியே 60 லட்சம், கோவாவில் ரூ.1 கோடியே 27 லட்சம், உத்தரகாண்டில் ரூ.47 லட்சம், மணிப்பூரில் ரூ.8 லட்சத்து 13 ஆயிரம் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் ரூ.25 கோடி மதிப்புள்ள மதுபானங்களும் சிக்கியது. 4,700 கிலோ போதை பொருட்களும் பிடிபட்டன” என்றார். 

Similar News