செய்திகள்

மராட்டிய பள்ளிகள்- அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ்

Published On 2017-01-28 06:31 GMT   |   Update On 2017-01-28 06:31 GMT
மராட்டிய பள்ளிக் கூடங்களில் கடவுள் படங்கள் வைக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. சிவசேனா எதிர்ப்பால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை:

மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி துறையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் உள்பட அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் மத சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வைக்கக் கூடாது, மதவாசககங்கள் எழுதி வைக்கக் கூடாது. மேலும் மத சம்பந்தப்பட்ட விழாக்கள், பண்டிகைகள், பூஜைகள் போன்றவற்றையும் நடத்தக் கூடாது. பள்ளிகள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள், வாசகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும்என்று கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று சிவசேனா மந்திரிகள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் மராட்டிய அரசை கடுமையாக விமர்சித்தார். பா. ஜனதா கூட்டணி அரசில் தொடருவது பற்றி மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மராட்டிய அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்றது. இது தொடர்பாக மாநில கல்வி மந்திரி வினோத் தவடே கூறுகையில், பள்ளிகள், அலுவலகங்களில் கடவுள் படங்கள், வாசகங்கள் வைக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் அதிகாரிகளே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

Similar News