செய்திகள்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு

Published On 2017-01-27 17:25 GMT   |   Update On 2017-01-27 17:25 GMT
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒத்தி போட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நேற்று கடிதம் எழுதினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்வது வாடிக்கை. இதனால் புதிய நிதி ஆண்டில் பட்ஜெட்டை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந் தேதி வரையில் தேர்தல் நடக்க உள்ளதால், மத்திய பட்ஜெட்டை முன்கூட்டி தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு சிறப்புத்திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க தேர்தல் கமிஷன் தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், “இது உத்தரபிரதேசத்துக்கு இழப்பை ஏற்படுத்தி விடும். 20 கோடி மக்களின் நலன்களிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்” என கூறி உள்ளார்.

எனவே தேர்தல் நடைமுறைகள் முடிகிறவரையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒத்தி போட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Similar News