செய்திகள்

அரசு பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன்

Published On 2017-01-16 22:21 GMT   |   Update On 2017-01-16 22:21 GMT
நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது
புதுடெல்லி:

நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி சுதர்சன் அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால் அசாம், திரிபுரா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, பீகார், டெல்லி, சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த நிலவர அறிக்கையை இதுவரை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது குறித்த நிலவர அறிக்கையை சமர்ப்பிக்காத தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காத மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘இது சுப்ரீம் கோர்ட்டா அல்லது நகைச்சுவை மன்றமா?’ என கேள்வி எழுப்பினர். இது பஞ்சாயத்து அல்ல என்று கூறிய அவர்கள், கோர்ட்டு உத்தரவை எளிதாக எடுக்க முடியாது என்றும் கூறினர். 

Similar News