செய்திகள்

ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி

Published On 2016-12-23 10:38 IST   |   Update On 2016-12-23 10:38:00 IST
அய்யப்பனுக்கு இரவில் பாடப்படும் ஹரிவராசனம் பாடலில் தவறு இருப்பதால், அந்த தவறை திருத்தி மீண்டும் யேசுதாஸ் பாடினால் சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளதாக தந்திரி கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.

அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படும். அத்துடன் நடை சாத்தப்படும்.

இந்த பாடலை பிரபல பாடகர் யேசுதாஸ் பாடியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த பாடலில் சிறு தவறு இருப்பதாக யேசுதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஹரிவராசனம் பாடலை பாடும்போது அதன் 3-வது வரியில் ‘ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்...’ என வருகிறது. இதில் ஹரி என்றால் எதிரி என்று பொருள். விமர்த்தனம் என்றால் அழித்தல் என்று பொருள். எனவே ஹரி, விமர்த்தனம் இரு வார்த்தைகளையும் தனித்தனியாக பாட வேண்டும்.

ஆனால் நான் இதை ‘ஹருவிமர்த்தனம்‘ என ஒரே வார்த்தையாக சேர்த்து பாடி உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பாடச் சென்றபோது அக்கோவில் தந்திரிதான் இந்த தவறை எனக்கு சுட்டிக்காட்டினார். எனவே எனக்கு மீண்டும் ஒருமுறை இப்பாடலை பாட வாய்ப்பு கிடைத்தால் திருத்தி பாட தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

மேலும் சமீபத்தில் அவர், சபரிமலைக்கு சென்றபோது சன்னிதானத்தில் இப்பாடலை திருத்தி பாடினார்.

இந்த தகவல் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு தெரிய வந்தது. அவர், இதுபற்றி கூறும்போது, ஹரிவராசனம் பாடலில் உள்ள தவறை யேசுதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த தவறை திருத்தி மீண்டும் அவர் பாடலை பாடினால் அதை சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளோம் என்றார்.

Similar News