செய்திகள்

நீதி வழங்காவிட்டால் சாவதற்கு அனுமதிக்கவேண்டும்: போலீஸ் ஐ.ஜி.யிடம் 12 வயது சிறுமி மனு

Published On 2016-12-15 08:16 GMT   |   Update On 2016-12-15 08:16 GMT
நீதி வேண்டும் இல்லை என்றால் கருணை கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் ஐ.ஜி.யிடம் 12 வயது சிறுமி மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் சந்துலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் பாண்டே. இவரது மனைவி குடியா. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒம்பிரகாஷ்- குடியா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் அனுஷ்கா (வயது 12).

குடியாவின் சகோதரர் திவாரி இவர் தனது சகோதரியை ஓம்பிரகாஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைதாகி விடுதலையானார்.

இந்த நிலையில் 12 வயதான அனுஷ்கா வாரணாசி போலீஸ் ஐ.ஜி. பகத்திடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தங்களுக்கு நீதி வேண்டும் இல்லை என்றால் கருணை கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை மீது தாய் மாமன் போலீசில் பொய்யான புகார் கொடுத்து தாயாரை அழைத்து சென்று விட்டார். குழந்தைகளாகிய நாங்கள் தாத்தா வீட்டில் வசிக்கிறோம். பீஸ் கட்ட முடியாததால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. இது தொடர்பாக நீதி கேட்டு சந்துலி போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டனர்.

எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். இல்லை என்றால் சாவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிறுமியின் இந்த மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்துலி போலீஸ் நிலையத்துக்கு வாரணாசி போலீஸ் ஐ.ஜி. உத்தரவிட்டார்.

Similar News