செய்திகள்

உ.பி. தேர்தல் பிரசாரத்தை தள்ளி வைக்க மோடி திட்டம்

Published On 2016-11-26 06:57 GMT   |   Update On 2016-11-26 06:57 GMT
ரூபாய் 500, 1000, பண நோட்டு பிரச்சினையால் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தள்ளி வைக்க மோடி திட்டமிட்டுள்ளார்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன.

இங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. எனவே, பாரதீய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு யாத்திரைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

தற்போது பாரதீய ஜனதா சார்பில் பரிவர்த்தனா யாத்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்த யாத்திரை வருகிற 24-ந் தேதி முடிவடைய உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.

அதேபோல வருகிற ஜனவரி 3-ந் தேதி லக்னோவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசுவதாக இருந்தது.

இப்போது ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினையால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலைமை சீரடைய இன்னும் 50 நாட்கள் ஆகும் என்று கணக்கிட்டுள்ளனர். அதன் பிறகு மக்கள் மத்தியில் அதிருப்தி விலகி விடும் என்று கருதுகின்றனர்.

எனவே, 24-ந் தேதியும், ஜனவரி மாதம் 3-ந் தேதியும் நடைபெறும் மோடி நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. 50 நாட்களுக்கு பிறகு வேறு ஒரு நாளை அறிவித்து அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளார். 

Similar News