செய்திகள்

விபசார தொழிலையும் பதம்பார்த்த ரூபாய் நோட்டு விவகாரம்

Published On 2016-11-16 09:26 GMT   |   Update On 2016-11-16 09:26 GMT
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தங்களை வெகுவாக பாதித்துள்ளதாக குற்றம்சாட்டும் விலைமாதர்கள், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் தங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி பிரதமர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
பாட்னா:

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது.

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடந்த ஒருவாரமாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

சில மாநிலங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ள ‘சர்வர்’ பழுதாகி விட்டதால் இங்குள்ள மக்கள் பணத்துக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டது. பல ஏ.டி.எம். இயந்திரங்கள் பணவறட்சியால் காய்ந்துப்போய் கிடக்கின்றன.

இதனால், நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை கிடைக்காத திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், பலதரப்பட்ட வர்த்தகமும், சிறு,குறு தொழில்களும் நலிவடைந்துள்ளன.

இந்த பாதிப்புக்கு நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகளும் தப்பவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் பிரபல சிகப்புவிளக்குப் பகுதியாக விளங்கிவரும் ‘சத்ருபுஜ் ஸ்தான்’ பகுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் விபசாரத்தையே தொழிலாக செய்து, வாழ்ந்து வருகின்றனர்.

இதுதவிர, மாநிலத்தின் பல பகுதிகளில் ‘கோத்தாஸ்’ எனப்படும் குடில்களில் ஆடல், பாடலுடன் மேற்படி தொழிலில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.



இவர்களில் பலர் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் இருந்தும் அண்டைநாடான நேபாளத்தில் இருந்தும் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த தொழிலில் ஈடுபடுவதற்காக இங்கு வந்து குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.

தங்களது அவல நிலையைப்பற்றி இங்கு ‘கோத்தாஸ்’ எனப்படும் குடில்களை நடத்திவரும் அக்ரம் கான் என்பவர் கூறுகையில், ‘ஏற்கனவே, மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியதால் எங்களது வருமானம் கணிசமாக குறைந்துப் போனது. தற்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாக்காசாகி விட்டதால் வாடிக்கையாளர்கள் வருகை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது. வரும் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களிடமிருந்தும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள இங்குள்ள பெண்கள் மறுக்கின்றனர்.’

பிரதமரின் இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் தங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி பிரதமர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று இங்குள்ள பெண்களும் குறிப்பிடுகின்றனர்.

Similar News