செய்திகள்

தள்ளாடும் வயதில் பழைய ரூபாயை மாற்றவந்த பிரதமரின் தாயார்

Published On 2016-11-15 12:23 IST   |   Update On 2016-11-15 12:23:00 IST
பிரதமர் மோடியின் முதியவயது தாயார் தன்னிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த சம்பவம் ஊடகங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்:

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடந்த ஒருவாரமாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

இந்த அவதிக்கு பிரதமரின் தாயாரும் விதிவிலக்கு அல்ல என்பதை விளக்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் வாழும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரான 97 வயது ஹீரா பென் காந்திநகரில் உள்ள வங்கிக்கு இன்று சக்கர நாற்காலியில் வந்தார்.


தள்ளாடியபடி நடந்துவந்து தன்னிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தந்துவிட்டு அவர் புதிய நோட்டுகளாக 4500 ரூபாயை பெற்றுச் சென்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

Similar News