செய்திகள்

காசு, பணம், துட்டு, மணி, மணி: 6 ஆயிரம் கோடி கருப்புப் பணத்துக்கு வரிகட்டும் வியாபாரி

Published On 2016-11-15 09:46 IST   |   Update On 2016-11-15 09:46:00 IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி தன்னிடம் உள்ள 6 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்:

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடந்த ஒருவாரமாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

ஆனால், பல்லாயிரம் கோடிகளாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் காதும், காதும் வைத்ததுபோல் கருப்பை வெள்ளையாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் நீர், நிலம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களில் மூன்றுக்கு தங்களது கருப்புப் பணத்தை இரையாக்கி வரும் செய்திகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. கிழிந்த ரூபாய் நோட்டுகள் ஆற்றிலும், கால்வாய்களிலும் மிதப்பதும், எரிந்த ரூபாய் தாள்களின் சிதிலங்கள் நடைபாதைகளில் காணப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி தன்னிடம் உள்ள 6 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை ஒப்படைத்ததோடு மட்டுமில்லாமல், மேற்படி தொகைக்கான 30 சதவீதம் வரியாக 1800 கோடி ரூபாயையும், இந்த வரித்தொகை மீதான 200 சதவீத அபராதமாக 3600 கோடி ரூபாய் என மேற்கொண்டு மொத்தம் 5400 கோடி ரூபாயை செலுத்தவும் இவர் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, பிரதமரின் அதிரடி அறிவிப்பான கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முதல் வருமானம் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இவ்வளவு பெருந்தன்மை கொண்ட அந்த வைர வியாபாரி, இதற்கு முன்னர் பலமுறை ஊடகச் செய்திகளில் இடம்பிடித்தவர்தான்.

தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு தீபாவளி போனசாக வீடுகளையும், கார்களையும், நகைகளையும், லட்சக்கணக்கான ரொக்கத்தையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் என்று பெயர்பெற்ற லால்ஜி பாய் துளசிபாய் பட்டேல் என்பவர்தான் நாட்டின் நலன் கருதி இவ்வளவு பெரிய தொகைக்கான கருப்புப் பணத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட பணத்தின் மூலம் இவர் திரும்பப் பெறுவது வெறும் 600 கோடி ரூபாய்தான். ஆனால், அவர் பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் கோடி ரூபாய் தராத நிம்மதியை இந்த 600 கோடி அவருக்கு நிச்சயமாக அளிக்கும் என நம்பலாம். இவரிடம் வசூலிக்கும் வரி மற்றும் அபராதத் தொகையை மத்திய அரசு தனியாக எடுத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு பயன்படுத்தினால், நிம்மதியோடு மக்களின் ஆசீர்வாதமும் லால்ஜி பாய் பட்டேலை போய்ச் சேரும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டை பகுதியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு தனது முதலாவது சுதந்திர தின உரையாற்றியபோது, அவர் தங்க சரிகைகளால் தனது பெயர் இழைக்கப்பட்ட கோட், சூட் அணிந்திருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.



பின்னாளில், இந்த கோட், சூட்டை இதே லால்ஜி பாய் பட்டேல்தான் 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 311 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தார். சமீபத்தில் மத்திய அரசின் பெண் குழந்தைகள் கல்வி திட்டத்துக்கு 200 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News