செய்திகள்

நமது வீரர்களின் உயிர் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி வானொலி உரை

Published On 2016-10-30 12:49 IST   |   Update On 2016-10-30 12:49:00 IST
எல்லைப்பகுதியில் நமது எதிரிகளுடன் போரிட்டு, வீரமரணம் அடைந்தவர்களின் உயிர் தியாகத்துக்கு இந்த தீபாவளி திருநாளில் தலை வணங்குவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றிவரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தனது பேச்சுக்கிடையே தெரிவித்தார்.

அனைத்து மக்களும் தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து நாட்டின் வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக கொண்டு செயலாற்ற வேண்டும் என கூறிய அவர் ஆபத்தில்லாத வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருந்து ஜாக்கிரத்தையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த தீபாவளியை நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் பண்டிகையாக கொண்டாடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சந்தேஷ்’ திட்டத்துக்கு கிடைத்துள்ள அபார வரவேற்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த மோடி, இதில் இணைந்து ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு நன்றி கூறியதுடன், எல்லைகளை பாதுகாக்கும் நமது படையினரின் வீரத்தை பெரிதும் புகழ்ந்துப் பாராட்டினார்.

எல்லைப்பகுதியில் அத்துமீறும் எதிரிகளுடன் போரிட்டு நாட்டு மக்களை பாதுகாக்க தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன். இந்த தீபாவளி திருநாளை அவர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

எல்லை பாதுகாப்பு படையினராகட்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினராகட்டும். நமது வீரர்கள் நம்மை பாதுகாப்பதால்தான் தீபாவளியை நாம் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Similar News