செய்திகள்

செம்மர கடத்தல்காரர்கள் கைது: திருப்பதி ஜெயில் நிரம்பி வழிகிறது

Published On 2016-10-16 06:26 GMT   |   Update On 2016-10-16 06:26 GMT
செம்மரக்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் திருப்பதி ஜெயில் கைதிகளால் நிரம்பி வழிகிறது.
நகரி:

திருப்பதியில் சேஷாசல மலைப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அடிக்கடி செம்மரங்களை கடத்துபவர்களை பிடித்து கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.

கைது செய்யப்படுவர்கள் திருப்பதி, சத்தியவேடு, சித்தூர், மதனபள்ளி, முகாளகஸ்தி, பிலேலு ஆகிய ஜெயில்களில் அடைக்கப்படுகிறார்கள். இந்த 6 ஜெயில்களிலும் சேர்த்து மொத்தம் 495 கைதிகளே அடைக்க முடியும்.

ஆனால் தொடர்ந்து செம்மரக்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் இருப்பவர்களுடன் செம்மரக்கடத்தல் கைதிகளும் அடைக்கப்படுவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு அறையில் 4 கைதிகள் அடைக்கவே வசதி உள்ளது.

ஆனால் இடநெருக்கடியால் ஒரு அறையில் 10 பேர் அடைக்கப்படுகிறார்கள். இந்த 6 ஜெயில்களில் தற்போது 656 கைதிகள் உள்ளனர். குறிப்பாக திருப்பதி ஜெயிலில் கைதிகளால் நிரம்பி வழிகிறது. முதலில் செம்மரங்களை கடத்துபவர்களுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்து வந்தது. தற்போது கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதால் ஜாமீன் கிடைப்பதில்லை. இதனால் ஜெயிலில் கைதி எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை சமாளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இதையடுத்து புதிய சிறைச்சாலைகளை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Similar News