இந்தியா

ஐதராபாத்தில் கொடிகட்டி பறக்கும் 'ஹைடெக்' விபசாரம்

Published On 2022-12-08 08:32 IST   |   Update On 2022-12-08 08:32:00 IST
  • ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் 14 ஆயிரம் அப்பாவி பெண்களை விபசாரத்தில் தள்ளியது அம்பலம்
  • ஒவ்வொரு ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நகரி :

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'ஹைடெக்' விபசாரம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் முதலில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார்.

அப்போது விபசார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர், சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் உள்ள சமீருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு விபசார விடுதி நடத்த ஆரம்பித்தனர். இவர்களோடு மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம் இதை நடத்தி வந்தனர்.

ஒவ்வொரு 'வாட்ஸ் அப்' குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 இளம்பெண்களுடன் விபசார விடுதிகளை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபசார தொழில் வெளிச்சத்துக்கு வந்தது. வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை 'வாட்ஸ்அப்' குழு மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள்.

அந்த பணத்தில் 30 சதவீதம் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்.

விபசாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபசாரம் நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News