கதம்பம்

அவர் ஒரு சரித்திர பொக்கிஷம்!

Published On 2022-07-15 10:53 GMT   |   Update On 2022-07-15 10:53 GMT
  • ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு.
  • அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

அது காமராஜர் ஆட்சி காலம். அப்போதுதான் அந்த பிரச்சனை எழுந்தது. அதிகாரிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, அதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க காமராஜர் அனுமதி கொடுத்ததுதான்..!

திண்டுக்கல்லை விட்டு வெகு தொலைவில், தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள் ஒரு நிர்வாகத்தினர்.

ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி தொழிற்சாலைகளை தொடங்க, ஏராளம் பேர் அனுமதி கேட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.

பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இதுவும் ஒன்றாக பரிசீலனையில் அதை வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

இந்த விஷயம் காமராஜரின் காதுகளுக்குப் போனது. அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார் காமராஜர்.

'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

காமராஜரின் இந்த உத்தரவை கேட்டவுடன் அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?' அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. உடனடியாக அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

"என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்!" என்றார்.

அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

"அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து கேட்டார் காமராஜர்.

"திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த தொழிற்சாலைக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?"

அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காமராஜரே பதில் சொன்னார்:

"அறுபது கிராமங்கள்.

அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. காரணம் அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, அவர்களுக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை நான் போட்டு இருக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?"

அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

காமராஜர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்து விட்டார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இப்ப சொல்லுங்க. திண்டுக்கல் நகரத்தில் இருந்து, அவர்களது தொழிற்சாலை வரை, அந்த தொழிற்சாலைக்காரர்கள், அவர்களது சொந்த செலவிலேயே மின் கம்பங்களை அமைத்து விடுவார்கள். அதற்குப் பின் நமது வேலை சுலபம்.

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த இடைப்பட்ட 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அந்த மின்கம்பங்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும். அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா ?"

ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை !

அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.

அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..!

அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் காமராஜர். வெகுநேர மௌனத்துக்குப் பிறகு காமராஜர் சொன்ன வார்த்தைகள்:-

"ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

தொடர்ந்து காமராஜர் சொன்னார். "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

அவர் இப்படி சொல்லிய பிறகு, ஏற்கனவே காமராஜரை பாராட்டி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், இன்னும் அதிகமாக அவரை பாராட்டி எழுத ஆரம்பித்தார்கள்.

இன்றும் கூட பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம் !

- ஜான்துரை ஆசிர்செல்லையா

Tags:    

Similar News

தம்பிடி