கதம்பம்

இவை எங்கெல்லாம் வரும்?

Published On 2023-04-12 16:34 IST   |   Update On 2023-04-12 16:34:00 IST
  • மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ட’ இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி ‘ண்’ தான் வரும்.
  • கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ற’ இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி ‘ன்’ தான் வரும்.

எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லித்தர பிள்ளைகளுக்குச் சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

ஓர் எளிய விளக்கம் :-

மூன்று சுழி "ண", இரண்டு சுழி "ன" மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,

"ன" இதன் பெயர் றன்னகரம்,

"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதற்கு "டண்ணகரம்" என்று பெயர்.

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "றன்னகரம்" என்று பெயர்.

இது இரண்டும் என்றுமே மாறி வராது..நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ட' இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏன் என்றால் அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ற' இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி 'ன்' தான் வரும். ஏன் என்றால் அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரிதான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" என்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

-வங்கனூர் அ.மோகனன்.

Tags:    

Similar News