கதம்பம்

அது தான் பெண் மனம்...

Published On 2023-03-28 10:39 GMT   |   Update On 2023-03-28 10:39 GMT
  • கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது.
  • திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள்.

ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது.

என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை.

கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடிபட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் சிலம்பு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில் கோவலன், கண்ணகியை போற்றுகிறான்.

"நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ... கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ... நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

முதலாவது, மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது.

"கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை.

ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு, கடைசியில் தான் முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின் விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம்- கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை இழந்தாள், பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

மற்றொரு உதாரணம் - சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம். இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது.

இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது இராமானுக்குத் தெரியாதா.. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை.

அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள். கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும், அவனுக்கு துணை செய்வது என்று அவள் முடிவு செய்து விட்டாள்.

கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.

மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும் அமங்கல சொற்களை சொல்லக் கூடாது.

மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி.

இறந்தார் என்று சொல்லுவது இல்லை. காலமானார், அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான் சொல்லுவது வழக்கம்.

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும். விதி, அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது.

"மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக என்கிறான். அவனுக்குத் தெரியாது நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச்சொல் வருகிறது. நமக்கு ஒரு பாடம் அது.

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம், வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள்.

-பி.டி.அரசு

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்