கதம்பம்

அறிவுக்கும் செல்வத்துக்கும் எட்டாதவன்!

Published On 2022-12-09 16:18 IST   |   Update On 2022-12-09 16:18:00 IST
  • திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
  • இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கதையோடு நின்று விடக்கூடாது.

சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும், அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள். கதை சொல்ல வந்த கருத்து என்ன?

திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால், நிறைய புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது என்று சொல்ல வந்த கதை அது.

யார் பெரியவர், யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.

பல பட்டங்கள் பெற்றால் இறைவனை அறிந்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது.

அன்பாலும் அறத்தாலும் மட்டுமே இறைவனை அடையமுடியும்.

-மோகன்ராஜ்

Tags:    

Similar News