கதம்பம்
null

நாளும் கோளும் என்ன செய்யும்?

Published On 2025-03-04 05:30 IST   |   Update On 2025-03-04 05:30:00 IST
  • நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை.
  • பக்தி உள்ளவர்களுக்கு துன்பத்தை தாக்குப்பிடிக்கும் சக்தியை இறைவன் கொடுப்பார்.

நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?

நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்பது செய்தி.

இதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் அருணகிரியாரின் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது.

"நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த

கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு

தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்

தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"

நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாதுஎன்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார்.

சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?

பார்க்க வேண்டும்..

நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!

பக்தி உள்ளவர்களுக்கு துன்பத்தை தாக்குப்பிடிக்கும் சக்தியை இறைவன் கொடுப்பார்!

எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள் கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள் என்கிறோம். அவர்களுக்கு தான் மேற்கண்ட வாசகம் பொருந்தும்.

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?

அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து அதில் செய்கிறார்கள்.

ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான் முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமையில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.

அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்தவீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல் போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன. அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடவேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச் செல்ல வேண்டியதுதான்.

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால், ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று மாதங்களுக்கும் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.

இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

-மாலதி ஜெயராமன்

Tags:    

Similar News