கதம்பம்

மனித இனமே குறைபிரசவம்தான்!

Published On 2022-06-09 16:24 IST   |   Update On 2022-06-09 16:24:00 IST
  • ஆடு, மாடு போன்றவற்றின் குட்டிகளும் கன்றுகளும் பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் நிற்கவும், நடக்கவும் பழகிவிடுகின்றன. கன்றெல்லாம் கையில் சிக்காமல் குதித்து ஓடும்.
  • மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

மனித இனத்தில்தான் குழந்தைகள் முதலில் குப்புற விழுந்து, தவழ்ந்து, பின் நடக்க என ஒரு வருடம் ஆகிவிடுகிறது. ஏன் இந்த வேறுபாடு?

ஏன் மனிதக் குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்துக்குள் நிற்கவோ ஓடவோ முடிவதில்லை?

காரணம் மூளை தான்..

ஒரு ஆதிக் குரங்கு வகையில் இருந்து மெல்ல மெல்ல மனித இனத்தின் மூதாதையர்களும், பிற பெருங்குரங்குகளும் பிரிகையில், நம் மூதாதைகளின் குழுச் செயல்பாடு, சிக்கலான சிந்தனை அமைப்பு ஆகியவற்றைச் சாத்தியமாக்க மூளை அளவும், அதனையொட்டி மண்டையோட்டின் அளவும் பெரிதானது.

ஆனால் இதில் பெண்ணினத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு. இந்தப் பெரிய மண்டையோடு பிரவசத்தின்போது இடுப்பெலும்பின் நடுவே புகுந்து வெளிவர முடியாது. இது தாய் சேய் உயிருக்கு ஆபத்து.

ஏதோ ஒரு மரபணுப் பிறழ்வில் மண்டையோட்டின் எலும்புகள் முழுக்க ஒட்டும் முன்னர், மூளையின் எல்லா இணைப்புகளும் கச்சிதமாக அமைக்கப்படும் முன்னர் பிரசவம் நிகழ்ந்தது. மண்டையோடு இறுகாமல் நெகிழ்வாக இருப்பதால் இடுப்பெலும்புக்குள் புகுந்து குழந்தையால் வெளிவர முடிகிறது.

பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் கவனம் அதிகம் தேவைப்பட்டாலும் தாய் சேய் இறப்பை இது கணிசமாகக் குறைத்ததால், இயற்கை மண்டையோடு ஒட்டுமுன்னர் பிறந்தலை தெரிவு செய்தது. தொடர்ந்து மனித இனத்துக்குள் அந்த விரைவுப் பிரசவம் நிகழும் மரபணுக்கள் பரவி, நாளடைவில் அதுவே நடைமுறையாகவும் ஆனது.

மனிதக் குழந்தைகள் பிறந்தபின்னர் மண்டையோட்டின் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி இறுகுகின்றன. மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

இது எல்லாம் கச்சிதமாக நிகழ நேரம் எடுத்துக்கொள்வதுதான், மனிதக் குழந்தைகள் நிற்கவும் நடக்கவும் தாமதமாக காரணம். ஒரு வகையில் இது குறைப்பிரசவம்தான். இல்லையெனில் நம் இனமே இல்லை.

-கே. சிவராமன்

Tags:    

Similar News