கதம்பம்

உடலை உரமாக்கும் வழிகள்...

Published On 2022-08-13 10:18 GMT   |   Update On 2022-08-13 10:18 GMT
  • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
  • எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

நமது எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, உட்கார, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.

இதனால்…நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது, மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.

எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க 10 அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.

1. எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.

2. கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்து உள்ளது . எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.

3. மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன... அதேபோன்று பெரும்பாலான தாது சத்துக்கள் முட்டையில் உள்ளது. இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டி முட்டையில் கிடைக்கிறது.மேலும் முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன.

4. ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

5. உடலை வலுவாக்கும் உன்னதமான சிறுதானியம் உளுந்து. இதில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப்பெயர் பெற்றது எனக் கூறுவார்கள். அதனால் வாரம் ஒரு முறையாவது உளுந்தை கஞ்சியாகவோ களியாகவோ கட்டாயம் சாப்பிட வேண்டும்.

6. முருங்கை கீரை எலும்புகளுக்கு பலம் தரும் மருந்தாகிறது. இது கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி, டி மற்றும் நார்சத்துக்களை உள்ளடக்கியது. எனவே அடிக்கடி முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

7. கேழ்வரகு 100 கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை சாப்பிடலாம்.

8. கார்பனேட்டட் குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமான பாஸ்பேட் இருக்கும். இது எலும்புகளை சிதைத்து விடும். இத்தகைய பானங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

9. பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன.

10. சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும். எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த 10 வழிகளையும் பின்பற்றினால் எலும்பில் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

-வைத்தியர் யாஸீன்

Tags:    

Similar News

தம்பிடி