கதம்பம்

பெண்களைப் பாதிக்கும் ரத்தசோகை

Update: 2022-08-10 09:41 GMT
  • இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.
  • சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுக்கு 14 கிராம் முதல் 16 கிராம் வரை

பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் வரை இருக்க வேண்டும்.

இரும்பும் புரதமும் கலந்த கலவையே ஹீமோகுளோபின்.

இந்த ஹீமோகுளோபின் என்பது ரத்த ஆற்றில் ஓடும் படகைப்போன்றது.

இந்த படகின் மூலம் தான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் எனும் உயிர்வளிக்காற்று உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லையும் சென்று சேர்கிறது.

நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான செல்களும் சேர்ந்தே சுவாசிக்கின்றன.

இப்படித்தான் மூளைக்கும் ஆக்சிஜன் செல்கிறது. மூளை எனும் தலைமைச்செயலகம் சிறப்பாக இயங்குகிறது.

இத்தனை இன்றியமையாத ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது?

நிலத்தடி நீர் மட்டம் ஏன் குறைகிறது? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள். மழை பொய்த்து விட்டது என்று தானே. நிலத்தடி நீர் ஊற மழை பொழிய வேண்டும். அதுபோல ஹீமோகுளோபின் ரத்தத்தில் சரியாக இருக்க, நாம் உணவு வழி இரும்புச்சத்தை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.

சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

மூலம் போன்ற நோய்களால் மலத்தில் ரத்தம் வெளியேறுவது, காச நோயில் இருமும் போது சளியுடன் ரத்தம் வெளியேறும்.

இந்திய துணைக் கண்டத்தில் ரத்த சோகைக்கு முக்கிய காரணமாக குடலில் தங்கி நம் ரத்தத்தை குடித்து வாழும் குடற்புழு நோயால் ரத்த சோகை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ரத்த சோகை யாருக்கு அதிகமாக வரும்?

வேறு யாருக்கு பெண்களுக்கு அதுவும் வளர் இளம் பெண்களுக்குத் தான்.

ஏன்?

பிரதிமாதம் இயற்கையாக நிகழும் மாதவிடாய் உதிரப்போக்கு மற்றும் அதை ஈடு செய்ய சரியான அளவு இரும்புச்சத்தை உண்பதில்லை போன்றவையே முதன்மை காரணங்கள்.

இந்த ரத்த சோகையின் அறிகுறிகள் தான் என்ன?

1.சோர்வு

2.உடல் வலி

3.எப்போதும் தூங்கி வழிந்தது போல் காணப்படுவது.

4.எதையோ இழந்ததைப் போல இருப்பது

5. முகம் வெளிறிப்போய் காணப்படுவது

(இதை பெண்கள் தாங்கள் வெள்ளையாகி விட்டோம் என்று எண்ணி சந்தோசப்படுவார்கள்)

6. மாதவிடாய் போக்கு குறைதல்

ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி ?

இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி12 ஆகிய இந்த இரண்டையும் சரி வர எடுப்பது ரத்த சோகையை வராமல் செய்யும்.

மாமிசம் உண்பவர்களுக்கு சிறந்த இரும்புச்சத்து அடங்கிய உணவு ஈரல்/ சுவரொட்டி ஆகும்.

உங்களுக்கு பிடித்த எந்த விலங்கின் ஈரலை உண்டாலும் உங்களுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நூறு கிராம் ஈரல் எடுக்கலாம்.

மாமிசத்தில் விட்டமின் பி12 உண்டு. இதை இரண்டையும் சரியாக எடுக்கும் அசைவ உண்ணிகளுக்கு நோ ப்ராப்ளம்.

முட்டை மட்டும் உண்பவர்களுக்கு முட்டை மஞ்சள் கருவில் இரும்புச்சத்து இருக்கிறது.

மரக்கறி உண்பவர்களுக்கு தங்களின் உணவில் கீரை வகைகளை அதிகம் எடுக்க வேண்டும்.

காய்கறிகள் செய்யும் போது இரும்பு வாணலியில் சமைப்பது சிறந்தது.

பீன்ஸ், ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்ச்சை, பேரீச்சம் பழம், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்பு இருக்கிறது.

இருப்பினும் வருடம் இருமுறை ஹீமோகுளோபின் செக் செய்து குறைந்தால் சப்ளிமெண்ட் எடுப்பது சிறந்தது.

வளர் இளம்பெண்கள் குடற்புழு நீக்க மாத்திரை வருடம் இருமுறை எடுக்க வேண்டும்.

ஏன் இத்தனை கவனமாக ரத்த சோகையை சரி செய்ய வேண்டும் தெரியுமா?

இன்றைய வளர் இளம்பெண்டிர் தான் நாளைய தாய்மார்கள்.

ஆண்கள் அனைவரும் நமது பொறுப்பிற்குட்பட்ட தாய்/அக்கா/தங்கை/மனைவி/ மகள் போன்றவர்களுக்கு அவ்வப்போது ஹீமோகுளோபின் எடுத்து சோதித்து வருவது நம் கடமை.

காரணம் - ஒரு குடும்பத்தில் மிகவும் குறைவான மருத்துவ கவனிப்பு கிடைக்கும் பாலினம் - பெண்கள்.

-டாக்டர். ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News