கதம்பம்

தாயென்று ஒரு தெய்வம்

Update: 2022-09-21 06:30 GMT
  • தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும், வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக...
  • ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார் காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!

கருவுற்ற நாள் தொட்டு கலந்திட்ட சுகக்கேடை

உருவுற்று மண்மீது உலகெட்டும் நாள்வரையில்

ஒரு உற்ற சுமைபோல உள்ளத்தும் உடலாலும்

வரம்பெற்று சுமக்கின்ற வல்லமையே தாய்மையடா!


நிறமுற்று நீ ஆள நின்நிழலாய் நிலந்தன்னில்

சரிவுற்று வீழும்வரை சளைக்காமல் உழைக்கின்ற

பரிவுற்ற தாய்க் காணும் பல நோன்பும் உனக்காக

நிறைவுற்று அவள் வாழ நினைக்காத தெய்வமடா!


துளிப்பெற்ற சுகத்துக்காய் துணை பெற்ற நலத்துக்காய்

வலிப்பெற்று நோய்ப்பெற்று வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

களிப்புற்ற சில காலம் கண்ணுக்கே வந்தாலும்

அலுப்புற்று ஒரு நாளும் அவள் சாய்ந்ததில்லையடா!


தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும்

வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக

ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார்

காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!

-பொன்மணிதாசன்

Tags:    

Similar News