கதம்பம்

குலதெய்வத்தை மறவோம்

Published On 2023-04-03 08:57 GMT   |   Update On 2023-04-03 08:57 GMT
  • பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
  • பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.

"குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது!"

"குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது" என்பவை பழமொழிகள்.

குல தெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில் அல்லது குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், ஒவ்வொரு சாதிப்பிரிவினரில் தோன்றி தங்கள் குலம் செழிக்கப்பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர்.

அப்படி நம் முன்னோர்களின் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் வணங்குவது நமது தலையாய கடமையாகும்.

குல தெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.

இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது!

பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.

குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

Tags:    

Similar News

ஹலோ..ஹலோ..!
அப்படியா..?