உண்மை எது
அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததா?

Update: 2022-06-02 13:29 GMT
மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு  ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். 

இந்நிலையில், மே 29ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாகவும், அக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அந்த அறிக்கையில், 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவையான நிதி மத்திய பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால், வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது என பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) தெரிவித்துள்ளது. 

‘மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவோ அல்லது பரிந்துரையோ மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என பிஐபி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News