செய்திகள்

வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பினால் 6 மாதம் ஜெயில்

Published On 2019-04-07 11:07 GMT   |   Update On 2019-04-07 12:06 GMT
வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #LoksabhaElections2019

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் மமேஸ்வரி கூறியதாவது:-  மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.

இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம்.

 


வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

அப்போது தாசில்தார் வில்சன், தேர்தல் துணை வட்டாட்சியர் தாமேதரன், துணை தாசில்தார் சரவண குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளனவா? அங்கு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

இதை தொடர்ந்து புல்லரம் பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து, விழிப்புணர்வுப் பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். #LoksabhaElections2019

Tags:    

Similar News