செய்திகள்

இந்த தேர்தலில் சாதிப்பாரா, கமல்ஹாசன்? - லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பு

Published On 2019-04-05 11:37 GMT   |   Update On 2019-04-05 11:37 GMT
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளின்படி இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த அளவுக்கு சாதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. #kamalhaasan #LSpoll #MNM
சென்னை:

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது? என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் இன்று வெளியிட்டார்.



இந்த கருத்து கணிப்பின் முடிவுகளின்படி, மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அவர் முதல்-அமைச்சராக வெறும் 7 சதவீதம் பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீமானை 5 சதவீதம் பேரும், ரஜினியை 4 சதவீதம் பேரும், அன்புமணி ராமதாசை 2 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு 60 சதவீதம் பேர் வாய்ப்பு இல்லை என்றும், 29 சதவீதம் பேர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 3.59 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று 4 சதவீதம் பேர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பிரச்சினைகளை கமல்ஹாசன் திறமையாக தீர்ப்பார் என்று 9 சதவீதம் பேர் கூறியுள்ளனர். #kamalhaasan #LSpoll #MNM
Tags:    

Similar News