செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 9, 13-ல் மோடி பிரசாரம்

Published On 2019-04-05 09:48 GMT   |   Update On 2019-04-05 09:48 GMT
பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ஏப்ரல் 9,13-ல் பிரசாரம் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi

சென்னை:

தமிழகம் புதுச்சேரியில் வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுடன் தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி ஆகியோருக்கு இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. 40 தொகுதிகளிலும் மிக தீவிரமான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இதனால் தமிழ்நாட்டுக்கு தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளனர்.

அ.தி.மு.க.-.பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா கடந்த வாரம் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

ஏற்கனவே பிரதமர் மோடி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்து விட்டார். கன்னியாகுமரியில் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

2-ம் கட்டமாக மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி தமிழகம் வருகிறார். வருகிற 9 மற்றும் 13-ந்தேதிகளில் 2 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

 


9-ந்தேதி (செவ்வாய்) மாலை தனி விமானத்தில் மைசூரில் இருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து காரில் கோவை கொடீசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

இரவு 8.45 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை கொடீசியா மைதானத்தில் போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன், இணை கமி‌ஷனர் சோமசுந்தரம் ஆகியோருடன் மோடிக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தினரர்.

13-ந்தேதி (சனிக்கிழமை) பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்று அவர் ஒரே நாளில் 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். அன்று நண்பகலில் தனி விமானத்தில் வரும் மோடி உச்சிப்புளி ராணுவ தளத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி புறப்பட்டு செல்கிறார். அங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அங்கு மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கேரளா புறப்பட்டு செல்கிறார். தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. #Loksabhaelections2019 #PMModi

Tags:    

Similar News