செய்திகள்

மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளது - கனிமொழி

Published On 2019-04-05 05:40 GMT   |   Update On 2019-04-05 05:40 GMT
மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #BJP #Kanimozhi #ADMK

சாத்தான்குளம்:

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. சாத்தான்குளம் பகுதியில் மணிநகர், சொக்கன்குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார் மடம், பொத்தகலான்விளை, முதலூர், விஜயராமபுரம், சாத்தான்குளம், பண்டாரபுரம், கலுங்குவிளை உள்ளிட்ட 27 கிராமங்களில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நம் எல்லோருக்கும் நாடு சொந்தமானதாகும். நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மக்களிடம் பா.ஜ.க. வி‌ஷத்தை கக்கி வருகிறது. சாதி, மதப்பிரச்சனைகளை உண்டாக்கி வருகின்றனர். மக்களுக்காக பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் பாடு படவில்லை. மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது.


நமது நாடு பாதுகாக்கப் பட பா.ஜ.க.வை நாட்டை விட்டே துரத்திட வேண்டும். தமிழக மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றிட வேண்டும். 5 வருட காலத்தில் இவர்களின் ஆட்சியில் யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் 150 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை மிரட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெண்களை பாதுகாக்கும் அரசு இல்லை. பெண்கள், ஏழை, எளிய மக்களுக்கு நியாயம் கிடைக்க நன்மை ஏற்பட பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புங்கள். இந்த இரண்டு ஆட்சியும், நீடித்தால் நாடும், தமிழரும் இல்லாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்ததுபோல் விவசாய கடன், மாணவர்களுக்கான கல்விக்கடன் போன்றவைகள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க பாடுபடுவோம்.

நீண்ட நாள் தி.மு.க.வின் கோரிக்கையான நீட்தேர்வு ரத்து செய்யபடும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு உதவிடும் நல்லாட்சி அமைந்திட தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #BJP #Kanimozhi #ADMK

Tags:    

Similar News