ரூ.4 லட்சம் குட்கா கடத்திய வாலிபர் கைது
- காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் விடுதிகளில் சோதனை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கமலக்கண்ணன், கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் களக்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா 15 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டையை சேர்ந்த பூபதி(வயது 34) என்பதும், குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.