உள்ளூர் செய்திகள்

ரூ.8.45 கோடி செலவில் அண்ணா மேம்பாலத்தை வலுப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

Published On 2023-04-28 09:28 GMT   |   Update On 2023-04-28 10:18 GMT
  • அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
  • மேம்பாலத்தில் உள்ள 97 தூண்களும் நவீன ரெடிமேட் கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்படுகிறது.

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலம் ஆகும்.

அண்ணா சாலையில் இருந்து மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி, பாரிமுனை செல்வதற்கு வசதியாக 5 முனை சாலை சந்திப்பில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது.

இந்த மேம்பாலம் 600 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலத்தின் அப்போதைய கட்டமான செலவு ரூ. 66 லட்சம் ஆகும்.

அந்த மேம்பாலம் கட்டப்பட்ட போது தினமும் அந்த வழியாக 20 ஆயிரம் வாகனங்கள் சென்றன. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் அப்போது ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. எனவே ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு இந்த மேம்பாலத்துக்கு அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேம்பாலத்தை வலுப்படுத்தி அழகுபடுத்தி புதுப்பிக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்காக அரசு சார்பில் ரூ.8.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தில் உள்ள 97 தூண்களும் நவீன ரெடிமேட் கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணிகளுக்காக ஏற்கனவே அங்கிருந்த மேம்பால தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டன. தூண்களை பலப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் முடிந்ததும் பாலம் முழுவதும் வண்ணம் தீட்டப்படுகிறது.

அதன் பிறகு பாலத்தின் கீழ் பூஞ்செடிகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்தமாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News