ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு
- மற்றொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்
- போலீசில் புகார்
வேலூர்:-
வேலூர் அடுத்த ஊசூர் சேர்ந்தவர் பரசுராமன். இவர், எல்லை பாதுகாப்பு படை வீரராக உள்ளார். இவரது மனைவி அஸ் வினி (வயது 38), கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி தங்ககோவில் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் அருகில் நின்றிருந்தார்.
அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, தனது வங்கிக் கணக்கில் மொத்தம் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்து சொல்லும்படி கூறினார். அந்த நபரும் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் போட்டு பார்த்தார்.
இதில், அந்த வங்கிக்கணக்கில் சில லட்சம் ரூபாய் இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் பணம் எதுவும் காட்டவில்லை என அஸ்வினியிடம் கூறினார். அதோடு, அவர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்கு பதிலாக அதேபோல் இருக்கும் மற்றொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
தொடர்ந்து, 3 நாட்களில் அஸ் வினியின் வங்கிக்கணக்கில் இருந்து சிறிது சிறிதாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் எடுத்து விட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச் சியடைந்த அஸ்வினி இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று முறையிட்டார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டை வாங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎம் கார்டு போலியானது என தெரியவந்தது. அப்போதுதான், அடையாளம் தெரியாத நபரிடம் ஒரிஜினல் ஏடிஎம் கார்டு கொடுத்து ஏமாந்தது அஸ்வினிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.