உள்ளூர் செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தை போலீசாரின் துரித நடவடிக்கையால் விரைந்து மீட்பு

Published On 2023-08-20 08:06 GMT   |   Update On 2023-08-20 08:06 GMT
  • கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
  • போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி

வேலூர்:

குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்படை

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.

பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.

அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News