- லத்தேரி கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் அருகே உள்ள பட்டுவான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் மகன் கந்தன் (வயது 19) கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள கீழ் முட்டுக்கூர் கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக கந்தன் சென்றிருந்தார்.
மாடுவிடும் விழாவில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வந்த காளைகளை இருபுறமும் நின்று வாலிபர்கள் கையால் தட்டிக் கொடுத்து ஆரவாரம் செய்தனர்.
அப்போது பாய்ந்து விழுந்த காளை ஒன்று கந்தனை முட்டி தூக்கி வீசியது.
இதில் அவரது கழுத்தில் கொம்பு குத்தி ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கந்தன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 16-ம் தேதி பனமடங்கியில் நடந்த மாடு விடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் என்பவர் நேற்று இறந்தார். இன்று 2-வது நாளாக மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
மாடு விடும் விழாவில் காளைகள் ஓடிவரும் பாதையில் எந்த காரணத்தைக் கொண்டும் நின்று ஆரவாரம் செய்ய வேண்டாம் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.